சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம். புரட்சி - கட்டுரை - 24.12.1933

Rate this item
(0 votes)

கடற்கரைக் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது 

காந்தி-சுயமரியாதைக்காரர் பேட்டி 

தோழர் காந்தி சென்னைக்கு விஜயம் செய்ததானது பெரிதும் அலங் கோலத்தில் முடிந்ததாகத்தெரிகிறது. பொது ஜனங்கள் காந்தியை வரவேற்க விரும்பவில்லை என்பதை சந்தேகமற வெளிப்படுத்தி விட்டார்கள். ஆதிதிராவிடர் குடியிருக்கும் பல இடங்களிலும் கருப்புக் கொடிகளும். காந்தி பகிஷ்கார விளம்பரங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. 

சென்ற 20 s மாலை சென்னை கடற்கரையில் காந்தியாரை வரவேற்க கூட்டப்பட்ட கூட்டம் குழப்பத்திலும் கூக்குரலிலுமே முடிந்த தாகத் தெரிகிறது. அன்று மாலை ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடியிருந்ததாகவும் முதலிலி ருந்தே அமளி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் கூட்டத் தைப்பற்றி பத்திரிகைகளில் காணப்படும் விபரங்களைக் கவனித்தால் காந்தியார் சென்னையில் பட்ட அவதியை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். 

"தமிழ் நாடு” பத்திரிகையில் அந்தக்கூட்டத்தைப்பற்றி காண்ப்படும் விபரத்தின் சாரம் வருமாறு :- "கூட்டம் குழப்பத்திலும், பெண்கள் குழந்தைகள் துயரத்திலும் முடிந்தது. அனேக பெண்களும் குழந்தைகளும் கூட்டத்தில் மிதிபட்டும் நசுக்குண்டும் காயங்கள் அடைந்ததாகவும், அனேகர் தங்கள் பணம் துணிமணி நகைகளை தவறவிட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தை சமாளித்து அமைதியை உண்டு பண்ண தொண்டர்கள் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று, தொண்டர்கள் ஜனங்களை பின்னால் பிடித்துத் தள்ளுவதும் ஜனங்கள் தொண்டர்களை பின்னால் பிடித்துத் தள்ளு வதுமாக இருந்தனர். அனேக தொண்டர்களுக்கு கூட்டத்தில் அடியும் கிடைத்தது. ஒரு தொண்டருக்கு கன்னத்தில் செருப்படியும் கிடைத்தது. தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு தனது தலைப் பாகை முதலியவற்றை பறிகொடுத்துவிட்டார். தொண்டர்கள் அவரைக் கூட்டத்திலிருந்து விடுவித்து அழைத்துச் சென்றனர். நிலைமை அதிக மோசாகிவிட்டது. தோழர் காந்தி அனைவரையும் அமைதியாக இருக்கக் கேட்டும் அமைதி ஏற்படவில்லை. சிலர் கூட்டத்தில் மணலை வாரி எறிந்தனர். காந்தியார் ஐந்து நிமிட நேரம் பேசின பின் கூட்டத்தை விட்டுச் சென்று விட்டார். அதன் பின்னும் கூட்டம் கலையாமல் ஜனங்கள் மேடைப் பக்கமாக ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார்கள்”. 

ஜஸ்டிஸ் பத்திரிகை இந்தக் கூட்டத்தைப் பற்றிய செய்திகளைப் பிரசுரித்திருப்பதில் அது வரவேற்பு கூட்டமா அல்லது பகிஷ்காரக் கூட்டமா” என்று தலைப்புக்கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. காந்தியார் பேசுகையில் போலீசார் அங்கு சேர்ந்தனர். அவர்களாலும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. ஆகையால் கூட்டத்தை கலைத்துவிட வேண்டிய தாயிற்று. காந்தியார் மிகவும் கஷ்டத்துடனே தமது மோட்டார் வண்டிக்கு போய் சேர்ந்தார் என்று ஜஸ்டிஸ் பத்திரிகை கூறுகிறது. 

"காந்தியார் கூட்டத்துக்குள் போவதற்குள்ளும், வெளியே போவதற் குள்ளும் அவர் பிழைத்து வெளியேறுவாரா என்ற திகில் பலருக்கு இருந்து கொண்டே இருந்தது. பிரசங்கம் முடிந்து திரும்பும்போது அவர்கள் தடுமாறி இரண்டுதரம் தன்னுடன் வந்த நண்பர்கள் மீது சாய்ந்துவிட்டார்” என்று ஜெயபாரதி தனது தலையங்கத்திலே கூறுகிறது. 

மேலும் குழப்பத்தில் முடிந்த இந்தக் கூட்டத்தைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை எழுதியிருக்கிற தலையங்கத்திலே."மகாத்மாகாந்தி ரயில் வண்டி யில் வந்து இறங்கியது முதல் நடைபெற்ற சகல கூட்டங்களிலும் கஷ்டமும், கலவரமுமே அதிகமாயிருந்து வருவதை யாவரும் கவனிக்கவேண்டும்” என்று எழுதியிருப்பது கவனிக்கதக்கது. 

தோழர் காந்தி தமிழ்நாட்டில் காலடி வைத்தது முதல் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பொதுஜனங்களிடை கூச்சலும், குழப்பமும், கஷ்ட மும் கலவரமுமே ஏற்பட்டுவருகின்றன. இனிமேல் அவர் போகிற இடங் களில் ஜனங்களுக்கு என்ன துயரம் நேரிடுமோ என்ற சந்தேகம் உதயமாகின்றது. 

சென்ற 22-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6-30மணிக்கு தோழர்கள் எஸ். ராமநாதன், எஸ். குருசாமி. குஞ்சிதம், கே.எம். பாலசுப்பரமணியம் 

அ. பொன்னம்பலம், ப. ஜீவானந்தம், சகுந்தலா, காந்தம் முதலிய பல தோழர் கள் சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பந்துலு வீட்டுக்கு சென்று காந்தியாரை கண்டு பேசினார்கள். சுயமரியாதை தோழர்கள் கேட்ட கேள்வி களுக்கு காந்தியார் சரியான பதில் கொடுக்காமல் “நான் எனக்கு தெரிந்தபடி பிரசாரம் செய்கிறேன். நீங்கள் உங்கள் இஷ்டப்படி பிரசாரம் செய்யுங்கள்” என்று சொன்னதாகத் தெரிகிறது. அந்த விபரங்கள் அடுத்த வாரம் வெளிவரும். 

புரட்சி - கட்டுரை - 24.121933 291

Read 22 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.